கன்னியாகுமரி, ஜன. 26 –
கன்னியாகுமரியில் நேற்று தேசிய கொடி ஏற்று நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓ.பி.எஸ் உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை திமுக அணிக்கு ஓ.பி.எஸ்., -ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு என்ன என்று எனக்கு தெரியாது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் புரட்சி தலைவர் ஆரம்பித்த அதிமுக தான் இன்றைக்கும் தமிழகத்தை ஆளப்போகும் கட்சியாக உள்ளது.
அதே போன்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால் ஏளனமாக நினைக்காதீர்கள் நாட்டை ஆளப்போகும் கட்சியாக இது மாறும் என்று வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் பேசினார். அதே போன்று இன்று மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்த கட்சியாக பா.ஜ.க., உள்ளது. கூட்டணி குறித்து தேமுதிக நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
திமுக எப்போதும் ஆளுநரை மட்டுமல்ல பெண்களையும் கேவலமாக பேசும் கட்சி. எல்லோரையும் அவமரியாதையுடன் நடத்தும் கட்சி திமுக., ஆ.ராசா பெண்களை எவ்வளவு கேவலமாக பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் தெரிந்தோ தெரியாமலோ ஓட்டு போட்டு ஆளுங்கட்சியாக திமுக வந்தது. ஆனால் அவர்கள் தேர்தல் அறிக்கை எதையும் செய்யவில்லை.
பழைய ஓய்வூதியம் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் 5 ஆண்டு முடியும் போது போராட்டத்திற்கு தயாராக வந்த போது ஜூன் மாதம் தரப்போவதாக கூறியுள்ளார்கள். ஜூன் மாதம் திமுக இருக்கபோவதில்லை என்பது அவர்களுக்கு தெரியும். இது தான் திமுகவின் போலி முகம். மாநில சர்க்கார் மற்றும் மத்திய சர்க்கார் இணைந்து பணியாற்றினால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற அர்த்தத்தில் பேசினார்.
ஆனா நம்மளோட முதலமைச்சரும் நல்ல கண்ணியமாக பேசக்கூடிய ஆளுதான் வர வர இப்ப கண்ணியம் தவறி போய் இருக்கிறது. காரணம் தோல்வி பயம் அவங்களுக்கு தோல்வி பதட்டம் வந்திருக்கிறது. அதனால டப்பா எஞ்சினு சொல்றாங்க. அது தேர்தல் முடிந்த பிறகு யாரு டப்பா எஞ்சின், எது ஒரிஜினல் என்ஜின் என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார்.



