நாகர்கோவில், செப்டம்பர் 17 –
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரலூரில் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. முன்பு திறந்த வெளியில் சந்தை நடைபெற்ற நிலையில் தற்போது அங்கு 16 கடைகள் கட்டி ஏலம் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. எனினும் இந்த சந்தையில் தரைத்தளத்திலும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. மீன் விற்பனைக்காக கடைகள் எடுத்த போதிலும் கடைகளுக்கு வெளியே வைத்தும் தரைத்தளத்திலும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மீன் கழிவுகள் அந்த பகுதியில் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வந்தது. இந்நிலையில் சுகாதார சீர்கேடு குறித்து மேயர் மகேஷிடம் புகார்கள் வந்தன.
இதை அடுத்து இன்று காலை சரலூர் மீன் சந்தையில் மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணாவுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளுக்கு வெளியே வைத்து மீன் விற்பனை நடைபெறுவதை கண்டித்த மேயர் மீன்களை கடைக்குள் வைத்து விற்பனை செய்ய உத்தரவிட்டார்.
மேலும் அனுமதி இன்றி வெளியே இருந்து மீன் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீன் சந்தை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். கண்ட இடங்களில் கழிவுகளை கொட்ட கூடாது. மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேயர் மகேஷ் எச்சரிக்கை விடுத்தார். மேயருடன் மாநகராட்சி அதிகாரிகள், மண்டல தலைவர் மற்றும் பலர் உடன் சென்றனர்.


