தருமபுரி, ஆகஸ்டு 13 –
தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை நல்லம்பள்ளி ஒன்றியம் பால ஜங்கமான அள்ளி ஊராட்சியில் இந்த திட்டத்தின் தொடக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதை தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் 70 வயது முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம் சிறப்பு கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும்.
இத்திட்டத்தின் வாயிலாக தருமபுரி மாவட்டத்தில் 1,005 ரேஷன் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட 26,781 குடும்ப அட்டைகளில் உள்ள 35, 385 பயனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களிலேயே குடிமை பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டம் செயல்பட உள்ளது. மின்னணு எடைதராசு, கைரேகை எந்திரம் உட்பட உபகரணங்களுடன் வாகனங்கள் குடிமைப் பொருட்களை பாதுகாப்பாக பயனாளர்களின் இல்லத்திற்கு சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பார்கள்.
எனவே இத்திட்டத்தை பயனாளிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் தனிகாசலம், பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் சுந்தர், சாரக துணை பதிவாளர் விஷ்ணு பிரியா, கூட்டுறவு பண்டக சாலை இணைப்பதிவாளர் கோப்பெரும்தேவி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.



