தஞ்சாவூர், செப்டம்பர் 1 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நடப்பு சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 410 டன்னும், தனியார் விற்பனை நிலையங்களில் 1,800 ம் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மண் வளம் காக்கும் வகையில் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள், ஆடாதொடை, நொச்சி நடவு செடிகள், வேப்பமரக்கன்றுகள், பாரம்பரிய நெல் விதைகள், மண் பரிசோதனை அட்டைகள் மற்றும் மண்புழு உரப்படுக்கைகள் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் நீடித்து நிலையான வேளாண்மை இயக்கம் கூட்டுப் பண்ணைய திட்டம் மற்றும் தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீன மயக்கம் திட்டத்தின் மூலம் 17 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் 4 கோடியே 79 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் உருவாக்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 14 ஆயிரத்து 463 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் பழுதான மின்மாற்றிகள் உடனுக்குடன் பழுது நீக்கம் செய்து சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு ஜூன் மாதம் 48 புதிய மின் மாற்றிகள் 1 கோடியே 68 லட்சம் செலவில் மேம்பாடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 2024-25 ஆம் ஆண்டு இலக்கீட்டின்படி சாதாரண திட்டத்தில் 57 மின் இணைப்புகள் தட்கல் திட்டத்தில் 254 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.



