தஞ்சாவூர், ஏப்ரல் 7 –
தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுவதை தொடர்ந்து மேயர் பதவியை சண். ராமநாதன் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஆணையரிடம் வழங்கினார்.
தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக இருந்து வந்தவர் சண். ராம நாதன். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது தஞ்சாவூர் மாநகராட்சி 45 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மேயராக பதவியேற்றார். இவருடைய பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதம் வரை உள்ளது.
இந்த நிலையில் சட்டமன்றத்தேர்தலில் தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளராக சண். ராமநாதன் அறிவிக்கப்பட்டார். இதையொட்டி அவர் தனது மேயர் மற்றும் கவுன்சிலர் பணிகளை ராஜினாமா செய்தார். இதற்கான தனித்தனி ராஜினாமா கடிதங்களை ஆணையர் கண்ணனிடம் வழங்கினர்.
பதவியை ராஜினாமா செய்த பின்னர் சண். ராம நாதன் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் கண்ணன் கூறுகையில் : தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளை சண். ராமநாதன் ராஜினாமா செய்தார். இனி அடுத்த மேயர் யார் என்பது குறித்து முடிவெடுக்க 3 மாத கால அவகாசம் உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்து அடுத்த மேயரை தேர்வு செய்வார்கள் என்றார்.



