தஞ்சாவூர், ஜூலை 9 –
தஞ்சாவூரில் உணவு பொருள்கள் கிடங்கில் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் நீலகிரி தெற்கு தோட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் உணவு பொருள்கள் இருப்பு கிடங்குகளில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனர் மோகன், மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் உணவு பொருள்களின் தரம், இருப்பு, எடை அளவு, பயன்படுத்தப்பட வேண்டிய காலம், இருப்பு குறித்த பதிவேடுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் தபீர்குளம் மற்றும் ஏழுப்பட்டியில் உள்ள பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் விற்பனை புள்ளி கருவியுடன் மின்னணு எடை தராசை இணைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இவர்கள் மழை காலம் நெருங்குவதால் உணவுப் பொருள்கள் இருப்பு கிடங்குகளில் சேதாரம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும், குறித்த நேரத்தில் பொது விநியோகத்திட்ட அங்காடிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும், பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும், குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கும் பொருள்கள் சென்றடையும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.