சேலம், செப்.08.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் சந்தைதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களிடம் பசுமை சிந்தனையை வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பசுமை பள்ளி திட்டத்தின் கீழ் மின்சாரத்துறை சார்பில் ரூ.13 லட்சம் மதிப்பில் 5 கிலோவாட் சூரிய மின்சாரத் தகடுகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் நடைமுறையில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் 3,500 சதுர அடி பரப்பில் படித்தோட்டம், 2,500 சதுர அடி பரப்பில் காய்கறி மற்றும் சமையலறை தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உரக்குழிகள் மூலம் மக்கும் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் பசுமை பள்ளி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் மற்றும் செடி, கொடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, மண் பொம்மை செய்தல், நாடகம், பசுமை வினாடி வினா, இலை ஓவியம், வேகமாக மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து பசுமை உயிர் திட்ட உறுதிமொழியையும் மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.



