திருப்புவனம், ஆக. 29 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மிதந்து வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கீழடி, பூவந்தி, ஏனாதி, நெல்முடிகரை, மடப்புரம் பகுதிகளில் கடந்த 21, 22 -ம் தேதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் வழங்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மனுக்கள் வைகை ஆற்று நீர்த்தேக்க பகுதியில் கிடந்துள்ளது.
வழியாகச் சென்ற அப்பகுதி இளைஞர் கார்த்திக் என்பவர் ஆற்றில் மிதந்து மனுக்களை எடுத்து பார்த்த பொழுது கடந்த 21, 22-ம் தேதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மக்கள் வழங்கிய மனுக்கள் என்பதை அறிந்து திருப்புவனம் காவல் நிலையத்திற்கு இளைஞர் கார்த்திக் தகவல் கொடுத்துள்ளார். பின்பு வந்த காவல் துறையினர் திருப்புவனம் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த பொழுது உயர் அதிகாரிகள் கையப்பமிட்ட மனுக்கள் என்பது உறுதியான பின்பு மனுக்களை எடுத்துச் சென்றனர்.
தங்களது பிரச்சனைகள் தீர்வு காணப்படும் என எதிர்பார்ப்புடன் மக்கள் கொடுத்த மனுக்கள் ஆற்றில் தூக்கி வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு அதிகாரிகள் அலட்சியமாக மக்கள் எந்த ஒரு அரசு நலத்திட்ட உதவிகளையும் பெறக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுவதாக தெரிகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்த பொழுது அந்த மனுக்கள் வெளியான தேதி தாலுகா அலுவலக சிசிடிவி ஆய்வு செய்து எவ்வாறு வெளியானது என்பதை விசாரணை செய்ய உத்தரவிட்டார். தவறு செய்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.



