சிவகங்கை, செப். 30 –
சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தை அடுத்துள்ளது கருங்காலக்குடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் கண்ணுச்சாமி நிலக்கிழார். இவர் தனது சுற்று வட்டார கிராம மக்களுடன் சேர்ந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருந்ததாவது: கருங்காலக்குடி குரூப்பில் உள்ள கருங்காலக்குடி சோழபுரம் பொண்ணாம்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் கிராவல் குவாரி அமைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அனுமதி வழங்கக் கூடாது. மேலும் இந்தப் பகுதியை பி.ஏ.சி.எல். என்னும் தனியார் நிறுவனம் பத்திரம் பதிவு செய்ய முயன்ற போது நீதிமன்றம் தடை ஆணை வழங்கி உள்ளது. இந்த விதியை மீறி குறிப்பிட்ட சில தனிப்பட்டோர் கிராவல் குவாரி அமைக்க தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிராமப் பகுதிகளில் கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கினால் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்து விடும்.
மேலும் இங்குள்ள மருதக்கண்மாய், மலையான்கண்மாய், பளிச்சன்கண்மாய், பொண்ணாங்கண்மாய், புதுக்கண்மாய், குண்டாகண்மாய் குத்திக்கண்மாய் மற்றும் ஊரணிகளுக்கு நீர் வரத்து இல்லாமல் போய்விடும். எனவே மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் தனிநபர் லாபத்திற்காக விதிகளுக்கு முரணாக கிராவல் குவாரி அமைக்க தாங்கள் அனுமதி வழங்காமல் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



