கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 11 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மாநில மற்றும் மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் 24×7 நேரமும் சுழற்சி அடிப்படையில் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தொடர்ச்சியான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகளின் விளைவாக 01.01.2025 முதல் தற்போது வரை மொத்தம் 167 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், எதிரிகளிடமிருந்து சுமார் 175 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கடத்தலில் ஈடுப்பட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 8 இருசக்கர வாகனங்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 772 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 769 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 14,200 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் தொடர்புடைய 45 நான்கு சக்கர வாகனங்கள், 14 இருசக்கர வாகனங்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் பொருட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான 2,657 இடங்களில் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வாண்டில் 7,525 லிட்டர் எரிச்சாராயமும் 3013 லிட்டர் வெளிமாநில மது பானங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மது பானங்களை விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக 2882 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2926 எதிரிகள் கைது செய்யப்பட்டு சுமார் 16,193 லிட்டர் அளவிலான மது பானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் தொடர்புடைய 17 நான்கு சக்கர வாகனங்கள், 40 இருசக்கர வாகனங்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, கள்ளதனமாக அரசு மதுபானம், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை எண்.9498181214 என்ற தொலைபேசி எண் மூலமாக அல்லது Whatsapp மூலமாக தகவல் தெரிவிக்கலாம். கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை சம்மந்தமான புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 10581 மூலமாக தகவல் தெரிவிக்கலாம். மேற்படி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.



