விளாத்திகுளம், பிப்ரவரி 17 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் மருத்துவ தேவைகளுக்கும், அதேபோல் பள்ளி கல்லூரி மாணவர்கள் மாணவ, மாணவிகள் விளாத்திகுளம் நகர் பகுதியில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் விளாத்திகுளத்திற்கு வந்து கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்நிலையில் விளாத்திகுளம் நகர் பகுதிகளான மதுரை சாலை, எட்டையாபுரம் சாலை வேம்பார் சாலை ஆகிய பகுதிகளில் சாலையில் இருபுறமும் வியாபாரிகள் கடைகளை அமைத்து ஆக்கிரமித்து இருப்பதால், ஒரு அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு விளாத்திகுளம் நகர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முன் வந்த போது, ஒரு சில அரசியல்வாதியின் அழுத்தம் காரணமாக ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
விளாத்திகுளம் மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 10 ஆண்டுகளை காட்டிலும் தற்போது விளாத்திகுளம் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகை கடை, மற்றும் ஜவுளிக்கடை, சிப்ஸ் கடை என பெரும்பாலான கடைகள் சாலைகளை இருபுறமும் ஆக்கிரமித்து இருப்பதால் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது, காலையில் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், அன்றாட வேலைக்கு செல்பவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் உரிய இடத்திற்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.
அதேபோல் மதுரை சாலையில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் சாலையை ஆக்கிரமித்து கொதிக்கும் எண்ணெயில் சிப்ஸ் போட்டு வருகின்றனர், நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் மற்றும் நடந்து செல்வோர் மீது கொதிக்கும் எண்ணெய் விழுந்து விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
அதேபோல் விளாத்திகுளம் பேருந்து நிலைய நுழைவு வாயிலின் இருபுறமும் பழக்கடைகள் ஆக்கிரமித்து, பேருந்து உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. நெடுஞ்சாலைத் துறை நெடுஞ்சாலையை எப்படி ஆக்கிரமித்து கடைகளை எப்படி அமைக்காலம் என்பது குறித்து தமிழகத்தில் உள்ள மற்ற வியாபாரிகள் விளாத்திகுளம் வியாபாரிகளிடம் பயிற்சி எடுக்கலாம்.
விளாத்திகுளம் பகுதி நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் இருபுறமும் (பிளாட்பார்ம்) நடைமேடை அமைத்து தர வேண்டும் என்று விளாத்திகுளம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



