மார்த்தாண்டம், ஜூலை.19-
குழித்துறை அருகே குறுமத்தூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (42).
இவர் அனிதா (32) என்ற பெண்ணை திருமணம் செய்து இவர்களுக்கு பிரதிஷ்கா (9) பிரதியா ஒன்றரை வயது என இரண்டு பெண் குழந்தைகளுடன் சென்னை குரோம்பேட் பகுதியில் தங்கி இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி இருவரும் வேலை முடிந்து செங்கல்பட்டு பரனூர் ரயில் நிலையத்தில் வந்தபோது புருஷோத்தமன் ரயில் மோதி பலத்த காயம் ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டார்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்பு காட்டான் குளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்று அங்கு ஒருநாள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவக் குழு அவருக்கு மூளை சாவு ஏற்பட்டதாக உறுதி செய்த நிலையில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவரது உடல் உறுப்புக்களை தானமாக வழங்கலாம் என முடிவு செய்தனர். பின்னர் மருத்துவர்கள் வழிகாட்டுதல் படி அரசு விதிமுறைகளை பின்பற்றி அவரது அனைத்து உடல் உறுப்புக்களை அரசுக்கு தானமாக வழங்கினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவரது உடலுக்கு செங்கல்பட்டு ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தரப்பில் அவரது உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சொந்த ஊருக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர்.
அவரது உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று அவரது உடலுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவரது உடலுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள், உறவினர்கள் என பலர் அஞ்சலி செலுத்திய பிறகு புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பகுதியில் உள்ள அவரது குடும்ப இடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்பட்டது.