களியக்காவிளை, ஜூலை 2 –
குழித்துறை அருகேயுள்ள பாலவிளை பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஆஷில் ஷாம் ஹல்ஸ் என்ற பிரின்ஸ். இவர் கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாராம். இவரிடமிருந்து இரு நாள்களுக்கு முன் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சீதன் (22) என்பவர் சொகுசு காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த கார் விபத்துக்குள்ளாகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிரதீப், ஆஷில் ஷாம் ஹல்ஸ் மற்றும் இவரது நண்பர்கள் கோழிவிளை இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கிருஷன் (21), மடிச்சல் வட்டவிளையைச் சேர்ந்த வினு மகன் அஜின் (21), களியக்காவிளையைச் சேர்ந்த பஷீர் மகன் பாஷித் (24), காஜா ஹலீல் முகம்மது மகன் அல்ஹான் (20) ஆகியோர் சேர்ந்து சீதன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள், 3 செல்போன்கள் மற்றும் தங்கச் சங்கிலி உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்களை பறித்துச் சென்றனராம்.
இது குறித்து சீதன் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, ஆஷில் ஷாம் ஹல்ஸ் உள்ளிட்ட 6 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.