மார்த்தாண்டம், செப். 16 –
குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி பகுதி நாகப்பள்ளிவிளையைச் சேர்ந்தவர் அஜிகுமார் மனைவி ரமணி (41). பி.எஸ்.சி., பி.எட். படித்த இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். அஜிகுமார் இறந்து விட்டார். இந்தநிலையில் ரமணி நேற்று காலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரமணி உயிரிழப்பதற்கு முன்பு எழுதி வைத்த 6 பக்க உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அதில், “எனது கணவர் இறந்த பிறகு அரசு வேலை கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் கருணை மனு கொடுத்தேன். அப்போது அந்த மனுவில் இருந்த எனது செல்போன் எண்ணை எடுத்து அங்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் என்னிடம் அடிக்கடி பேசி தொந்தரவு கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் தனக்கு திருமணமாகி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு முடிவுக்கு வந்ததும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். இதனை நான் கண்மூடித்தனமாக நம்பினேன். இந்த நம்பிக்கையால் அவர் என்னிடம் கேட்ட நகை மற்றும் பணத்தையும் கொடுத்தேன். சத்தியமாக உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று வாக்குறுதியும் அளித்தார். ஆனால் அவர் எனக்கு தெரியாமல் கடந்த மே மாதம் வேறொரு பெண்ணை மணமுடித்தார். இதனை அறிந்த நான் அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி கேட்டதால் அவர் மற்றும் அவருடைய உறவினர்கள் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் தற்கொலை முடிவை எடுக்கிறேன் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
மேலும் இதுகுறித்து ரமணியின் தந்தை ஜார்ஜ் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறப்பதற்கு முன்பு ரமணி எழுதிய உருக்கமான கடிதத்தில், தன்னுடைய தந்தை, மகளிடம் மன்னிப்பு கேட்டும் எழுதியுள்ளார். அதில், “அப்பா, எனது பிள்ளையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். என் இறப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுங்கள் என்று அதில் ரமணி தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போது இந்த கடிதத்தை உண்மை தன்மையை அறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கடிதத்தை ரமணிதான் எழுதியுள்ளாரா? என்பது உறுதி செய்ய ஆய்வு நடப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ரமணி கடிதத்தில் கூறி இருந்த அரசு அதிகாரியிடம் தொடர்ந்து 2 நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியை உடனே கைது செய்ய வேண்டும் என்று ரமணியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



