மார்த்தாண்டம், செப். 23 –
சித்திரம்கோடு அடுத்த காயல்கரை பகுதி சேர்ந்தவர் ராஜாங்கம் (32). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் குலசேகரம் அருகே உள்ள பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க நேற்று சென்றார். பின்னர் அப்பகுதியிலுள்ள குளத்தின் கரையில் நின்ற தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துள்ளார். அப்போது சில தேங்காய்கள் குளத்துக்குள் விழுந்து உள்ளது.
இதையடுத்து ராஜாங்கம் மரத்திலிருந்து கீழே இறங்கி தேங்காய்களை எடுக்க குளத்துக்குள் சென்றுள்ளார். அந்த குளத்தில் அதிக அளவில் தண்ணீர் இருந்துள்ளது. மேலும் குளத்தில் புதர்கள் வளர்ந்து சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இதற்கிடையே குளத்துக்குள் சென்று தேங்காய்களை எடுத்த ராஜாங்கம் சகதி மற்றும் புதர்கள் காரணமாக கரையில் ஏற முடியாமல் தவித்தார். பின்னர் அவர் சிறிது நேரத்தில் சகதி மற்றும் புதர் செடிகளுக்கு இடையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் மூழ்கி இருந்த ராஜாங்கத்தின் உடலை மீட்டனர். பின்னர் குலசேகரம் போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



