மார்த்தாண்டம், ஜன. 13 –
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன் தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தினர். தொடர்ந்து கோல போட்டி, திருமணம் ஆனவர்கள் திருமணமாகாதவருக்கான வடம் இழுத்தல் போட்டி, ஆண், பெண்களுக்கான பலூன் ஊதி உடைத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன் கூறியதாவது: 2026 தேர்தலில் அதிக தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து அனுப்பவும், திமுகவை வீட்டிற்கு அனுப்பவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் போதை கலாச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. இளைஞர் போதைக்கு அடிமையாக உள்ளனர். மாணவர்கள் கையில் கூட எளிதாக கஞ்சா, அபின் போன்ற போதை பொருள் எளிதாக கிடைக்கிறது.
எங்கும் போதை, கள்ள சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. எந்த தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை. தேர்தல் நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைக்கப்படும், ரப்பர் சார்ந்த தொழில் சாலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது நேற்று வனத்துறை அமைச்சர் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் சாலை அமைக்க முடியும் என்று கூறி இருப்பது மக்களை ஏமாற்றும் செயல்.
தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளது திமுக. இதனால் ரப்பர் விவசாயிகள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். ரப்பர் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது போன்று ஐடி பார்க் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கனிம வளங்கள் கேரளாவிற்கு கடந்த பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



