நாகர்கோவில், ஜூலை 7 –
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில்: ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் கடலோர மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் மீன் பிடி தொழிலை மட்டுமே நம்பி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 47 கிராமங்கள் உள்ளன. அக்கிராமங்களில் சுமார் 350000/-(மூன்று லட்சத்து ஐம்பது ஆயிரம் ) மக்கள் வாழ்கின்றனர். ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரையோர நிலப் பரப்பானது 71.5 கிலோமீட்டர் ஆகும். தமிழ்நாட்டில் கடலில் மீன் பிடி தொழில் செய்யும் மீனவர்களின் எண்ணிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடல் சார்ந்து தொழில் செய்யும் மீனவர்களின் எண்ணிக்கை 26% சதவீதம் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழும் பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் அனைவரும் மன்னார் வளைகுடா தெற்கு கடல் பகுதியில் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்கள் .
எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் போது ஏற்படும் கடல் மாசுபாடு, மீன்வளம் குறைதல், கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு போன்ற காரணங்களால் மீனவர்களின் தொழில் பாதிக்கப்படும். மேலும், மீன்பிடி பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் போது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது. மேலும் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் போது கசிவுகள் மற்றும் கழிவுகள் கடலில் கலப்பதால் கடல் நீர் மாசுபாடும். இதனால் மீன் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். மேலும் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் போது எழும் அதிர்வுகள் மற்றும் வேதிப்பொருட்கள் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் வாழ்விடத்தை பாதிக்கும். இதனால் மீன்வளம் குறையும். மேலும் கடல் நீர் மாசுபடுவதால் மீனவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படலாம். மீன்வளம் குறைவதால் மீனவர்களின் தொழில் பாதிக்கப்படும்; வருமானம் குறையும். அது அவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும்.
அதுமட்டுமல்லாமல் மன்னார் வளைகுடா பகுதியானது முழுக்க முழுக்க தமிழர்கள் நிலப்பரப்பை ஒட்டிய தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இலங்கைக்கு இடையேயான கடல் பகுதி ஆகும். இப்பகுதியில் ஒன்றிய அரசு கொண்டுவரும் இத்திட்டமானது தமிழர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்படும் திட்டமாக இருக்கிறது. அப்பகுதியில் 104 வகையான மீன்களும், பவள பாறைகளும், கடல் புல் படுக்கைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், சேற்று படுக்கைகள், தீவுகள், காடுகள் என பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய கடல் பரப்பாக அமைந்துள்ளது. தமிழக கடற்பரப்பு எல்கைகளான தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே 21 தீவுகள் உள்ளன. இத்தீவுகளை அளிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் ஒன்றிய அரசு செயல்படுகிறது என எண்ணத் தோன்றுகிறது. முக்கியமாக அரிய வகை மீன் வகையை சார்ந்த கடற்பசு அதிகமாக இப்பகுதிகளிலே உள்ளது. மேலும் 45 வகையான பாலூட்டி வகையை சார்ந்த மீன் இனங்கள் இப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. பல வகையான ஆமைகள் இனமும் இப்பகுதிகளே அதிகம் காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கடல் சாராத மக்களுக்கும் 80% (எண்பது) சதவீதத்திற்கு அதிகமான மக்களின் முக்கிய உணவாக மீன் உணவு உள்ளது. கடலில் போடப்படும் ஆள் துளை கிணறுகளின் அதிர்வுகளால் நிலப்பரப்பில் இருக்கும் மக்களுக்கும் அதன் தாக்கத்தை உருவாக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
ஆதலால் கன்னியாகுமரி மாவட்ட கடலோர மக்களின் வாழ்வாதாரத்தையும் கடலில் வாழும் உயிரினங்களின் வாழ்வாதாரத்தையும் கடலின் வளங்களை பேணி காக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும் கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களின் மக்களுக்கும் மீனவ கிராமங்கள் சாராத மக்களுக்கும் எந்த பேராபத்தும் வராதபடி இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மூலம் மன்னார் வளைகுடா கன்னியாகுமரி தெற்கு கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து இந்திய ஒன்றிய அரசின் இத்திட்டத்தை முழுவதுமாக நீக்க அறிவுறுத்த தாங்கள் ஆவண செய்து கன்னியாகுமரி பகுதி மீனவ மக்களின் இயல்பான வாழ்க்கையில் எவ்வித இடையூறும் இல்லாமலும் திட்டம் சார்ந்து கன்னியாகுமரி மாவட்ட மீனவ மற்றும் பொது மக்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்து இத்திட்டத்தை முற்றிலும் அரசு கைவிட வழிவகை செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.