காரியாபட்டி , ஜுலை 09 –
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள தொட்டியங்குளம் கல்லடியான் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் விழா நடத்த கமிட்டியாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு முதல் நாள் விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டது. இரண்டாம் நாள் யாகசாலை பூஜைகள் முடிந்தவுடன் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி ஆலயத்தை சுற்றி வலம் வந்து கோபுரத்தின் கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதன் பிறகு மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீப ஆராதனைகள் பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தொட்டிங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.