திருப்பத்தூர், ஜூன் 26 –
தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இறப்பின்போது ஊர்வலத்தில் பங்கேற்ற திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சி இரண்டாவது வார்டு கிளை செயலாளர் செல்வம் என்பவர் இடிபாடுகளில் சிக்கி உடல்நலம் குன்றி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழா மற்றும் நலத்திட்டங்களை வழங்க வருகை தரும் நிலையில் கட்சிக்காக உழைத்து இறந்த இந்த குடும்பத்திற்கு உதவவிடுவாரா? என்ற கேள்விக்குறியாக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம், ஒன்றிய அரசினை எதிர்த்தும், தெருமுனை பிரச்சாரம், தேர்தல் பங்களிப்பு என பல்வேறு கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற, மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி தலைவர், கவுன்சிலர் வரை தேர்தல் பணி ஆற்றி உள்ளார். குறிப்பாக எலவம்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினராகவும், அறங்காவலர் குழு உறுப்பினராகவும், ஒன்றிய செயலாளரை தேர்ந்தெடுக்கும் வாக்கு பிரதிநிதியாக இருந்துள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிடிப்போடு இருந்து வந்த இவர் கலைஞர் மீது தீராத பற்றுக் கொண்டு இருந்ததால் தொடர்ந்து முழு நேர அரசியல் பணியில் இருந்து வந்துள்ளார்.
8.8.20218 அன்று கலைஞரின் இறப்பு செய்தி அறிந்து சென்னை நோக்கி பயணம் செய்து ஊர்வலத்தில் சிக்கி தடுமாறி விழுந்ததில் பெருத்த காயம் ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இருப்பினும் இவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் திமுக கொள்கையோடு இருப்பதால் இந்த தகவலை அப்போது இருந்த மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோரிடம் தகவலை தெரிவித்த நிலையில் கண்டிப்பாக மாண்புமிகு கழக தலைவரிடம் கூறி தகுந்த நிவாரணம் பெற்றுத் தருவதாக கூறினார்கள். இது வரை எந்த நிலைப்பாடும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோரிடம் கோரிக்கை வைத்தபோது பரிந்துரை கடிதம் அளித்தனர். இருப்பினும் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தகுந்த நிவாரணம் அளிப்பாரா என அப்பகுதி தொண்டர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது.