சுசீந்திரம், ஜுன் 13 –
கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ் குமார் பொதுமக்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு, விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு போன்ற விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த செய்திகளை கல்லூரி, பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். அதுபோல பள்ளி, கல்லூரி அருகே உள்ள பெட்டிக்கடைகளுக்கும் அடிக்கடி சென்று போதைப் பொருட்கள் ஏதும் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ் குமார் தலைமையில் விபத்து இல்லா மாவட்ட திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்று சீட் பெல்ட் அணிவோம்; செல்போன் தவிர்ப்போம்; போதைப் பொருட்கள் மதுவை தவிர்ப்போம் என உறுதிமொழி எடுத்தனர். சாலை பாதுகாப்பை உணர்த்தும் விதத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.