நாகர்கோவில், ஜூன்.16-
உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு விழிப்புணர்வு தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 15ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. முதியவர்களுக்கு எதிராக நிகழும் உடல் ரீதியான, மன ரீதியான மற்றும் நிதி ரீதியான வன்கொடுமைகளைத் தடுப்பதும், அவர்களுக்குப் பாதுகாப்பான, கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதன்ஒருபகுதியாக இன்று மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார்.
முதியோர்களை முதியோர் இல்லங்களில் சேர்பதை தவிர்த்து, அவர்களுக்கென அங்கீகாரம் வழங்கி, அவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப், தலைமையில் உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்து, அவர் கையெழுத்திட்டார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கு.சுகிதா (பொது), பத்மபிரியா (நிலம்), மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



