ஈரோடு, ஜூலை 4 –
ஈரோடு பகுதியில் பல்வேறு இடங்களில் சாயப்பட்டறைகள் செயல்படுகிறது. இதில் பல பட்டறைகளில் இருந்து சாய கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றி ஆற்றில் கலப்பதாகவும் இதனால் விவசாயம் மட்டும் அல்லாமல் அதை பயன்படுத்தும் பொது மக்கள் தோல் அரிப்பு மற்றும் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படுதாகவும் பொது மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இவ்வாறு கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 7 மாதங்களில் மட்டும் 70 சாயப் பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும் பெரிய சேமூர் பகுதியில் மட்டும் 17 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் ராஜ் குமார் தெரிவித்து உள்ளார்.
மேலும் இது பற்றி அவர் கூறும் போது ஈரோடு மாவட்டத்தில் சாய கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீதும் விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டறைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொது மக்கள் தங்கள் பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்படும் சாயப்பட்டறைகள் மற்றும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.