ஈரோடு, ஜூன் 17 –
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. இதில் கல்லூரிகளின் போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கொரியர் சேவை நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது கல்லூரி போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாணவ, மாணவியர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், கல்லூரிகளில் அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
மேலும், கல்லூரி நிர்வாகங்கள் தங்களது பணியாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மூலம் மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்தாத வகையில் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருள் தடுப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் ஈரோடு மாவட்டத்தை போதைப்பொருட்கள் இல்லா மாவட்டமாக உருவாக்கி, மாநில அளவில் முன்னோடி மாவட்டமாக திகழச் செய்வதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உதவி ஆணையர் (கலால்) தியாகராஜன் மற்றும், கல்லூரிகளின் போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள், கூரியர் நிறுவன உரிமையாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



