தருமபுரி, ஆகஸ்ட் 1 –
தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 25-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தலைமைக்குழு உறுப்பினர்கள் மணி, முருகன், கமலா மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நஞ்சப்பன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் வேலை அறிக்கை வாசித்தார். மாநில கட்டுபாட்டுக்குழு தலைவரும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பராயன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநில துணை செயலாளர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் இரவி ஆகியோர் அரசியல் விளக்க உரையாற்றினர்.
மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொம்மிடி-கோம்பேரி இணைப்பு சாலை திட்டத்தை விரைவாக பணி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவது எனவும் ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். சிப்காட் தொழில்பேட்டையை தொடங்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
சிறு,குறு தொழில்கள் தொடங்க வங்கிகள் காலதாமதமின்றி கடன் வழங்க வேண்டும். விடுபட்டுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும். கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும். வீட்டு மின்சார ரீடிங் மாதம் ஒரு முறை கணக்கீடு செய்ய வேண்டும்.வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும். அரூரில் மாலிப்டினம் தொழிற்சாலை அமைக்க வேண்டும். மாநாட்டில் இறுதியாக மாநில செயலாளர் முத்தரசன் இன்றைய அரசியல் நிலை மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசினார். மாவட்ட பொருளாளர் மாதையன் நன்றி கூறினார்.