நாகர்கோவில், ஜூலை 28 –
தமிழகத்தில் தற்போது புதிய ஆட்சி அமைந்துள்ளதை தொடர்ந்து கடந்த ஆட்சி காலத்தில் பொறுப்பில் இருந்த அரசு வக்கீல்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து புதிய அரசு வக்கீல்கள் நியமனம் நடைபெற்று வருகின்றன.
குமரி மாவட்டத்திலும் புதிய அரசு வக்கீல்கள் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பதவிக்காக தெவெக நிர்வாகி ஒருவர் பெண் வக்கீல் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கேட்டு பேரம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தவெக கட்சியினரிடையேயும், பொது மக்களிடமும் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது.
அந்த ஆடியோ உரையாடலில், – பெண் வழக்கறிஞரிடம் நீங்கள் கட்சியில் இணைந்தவர் என்பதால் உங்களது பெயரை அரசு வழக்கறிஞர் பொறுப்பில் பரிந்துரைக்க ரூ. 15 லட்சம் தந்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என நிர்வாகி கூறுகிறார். மேலும் பணத்தை தயார் செய்ய முடியுமா? என அவர் கேட்கிறார். அதற்கு பெண் வக்கீல் என்னால் அவ்வளவு பெரிய தொகையை தர முடியாது என மறுக்கிறார். மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. நான் வழக்கறிஞராக பதிவு செய்து 7 ஆண்டுகள் ஆகிறது என்று அந்த பெண் வக்கீல் கூறுகிறார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியான இந்த ஆடியோ விவகாரம் குறித்து கட்சியின் தலைமை தீவிர கவனம் செலுத்தி விசாரித்தது.
இந்த நிலையில் கட்சியின் கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்த அனீஸ் குமார் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அவர் பொறுப்பிலிருந்து உடனடியாக தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். கட்சி ஒழுக்கத்தை மீறும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


