ஈரோடு, செப். 23 –
அண்ணா பாரம்பரிய மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடாசலம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார் . அதில் கூறியிருப்பதாவது: மண்பாண்ட தொழில் மிகவும் நசிந்து வருகிறது. உற்பத்தி பொருட்களான மண் போன்றவை கிடைப்பதில்லை. சூளை வைக்க இடம் இல்லை உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப் படுத்த முடியவில்லை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 12500 பேருக்கு ரூ.4000 வழங்கப்பட்டது. தாங்கள் (எடப்பாடி பழனிச்சாமி) ஆட்சி வந்த பிறகு இந்த தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
தற்போது திமுக ஆட்சியில் ரூ. 5000 வாங்கியவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்கு இந்த தொகை வழங்குவதில்லை. மகளிர் உரிமைத் தொகை பெற்றவர்களுக்கு மழைக்கால நிவாரணம் கொடுப்பதில்லை. இந்த வருடம் 5500 பேருக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்பட்டது. எனவே மண்பாண்ட தொழிலாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவித்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


