நாகர்கோவில் மார்ச் 09
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நபர் ஒருவர் பைக்குடன் சேர்த்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வயல்தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலு (40). இவர் அந்த பகுதியிலேயே கடை ஒன்றை வைத்திருந்த நிலையில், இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கற்களை கொண்டு வேலு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்த வேலு மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தோடு சேர்த்து வேலு எரிந்து உயிரிழந்தார். காலையில் இந்த சம்பவம் அனைவருக்கும் தெரியவந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது முன்விரோதத்தில் நிகழ்ந்த கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.