தேனி
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நல வாரியம் அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.
இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி, நலத்திட்ட உதவிகள் பெற 1) கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் 2) 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 3) கிறித்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், அபலையர் நிலையங்கள், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு இல்லங்கள், மற்றும் தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் குறைந்தது ஏழு ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும். 4) அதற்கான சான்றிதழை அங்கீகரிக்கப்பட்டுள்ள திருச்சபையிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியான நபர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.