நாகர்கோவில், மே 4:
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தமிழக அரசு தடை விதித்துள்ள பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளனர். உத்தரவின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை நாகர்கோவில் மாநகராட்சி மாநகர் நல அதிகாரி டாக்டர் ஆல்பர் மதியரசு தலைமையில் சுகாதார அலுவலர்கள் ராஜாராம், ராஜா, முருகன், பகவதி, பெருமாள் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம் பாண்டியன், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கர நாராயணன், ரவி, பிரவீன், சக்தி முருகன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் நாகர்கோவில் கனகமூலம் சந்தை மற்றும் ஒழுகின சேரி அப்டா மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஐந்து கடைகளில் 1500 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், பைகள் முதலியன பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு ரூபாய் 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வடசேரி கனகமூலம் சந்தையில் சோதனையில் ஒரு கடையில் 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடை சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக மாநகர நல அதிகாரி டாக்டர் ஆழ்பர் மதியரசு கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இக்குழுவினர் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணித்து வருகிறோம். விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



