தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் ஐந்தாவது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கிறிஸ்துவ பெண்கள் உதவும் சங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார் , திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் இராபர்ட் புரூஸ், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தென்காசி மாவட்டத்தில் மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்துவ பெண்கள் உதவும் சங்கத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்துவ சங்கம் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சமுதாயத்திற்கு பெண்கள் முதுகெலும்பு போன்றவர்கள். பெண்கள் முன்னேறினால் தான் சமுதாயம் முன்னேறும். சமூக பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள இஸ்லாமிய பெண்களை ஊக்குவித்து அவர்களுக்கு நிரந்தரமான தொழில், வருமானம் கிடைக்கும் வகையில் தொழில் வாய்ப்பு அளிக்கப்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும் வகையில் முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்துவ பெண்கள் உதவும் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமூக சிந்தனையோடு சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரும் ஏழைகள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் மூலம் 37 பயனாளிகளுக்கு தொழில் உதவித்தொகையாக தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.3,70,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 58 பயனாளிகளுக்கு தலா ரூ.8450/- வீதம் மொத்தம் ரூ.4,90,100/- மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல்இயந்திரங்களையும், கிறிஸ்துவ பெண்கள் உதவும் சங்கம் மூலம் 50 பயனாளிகளுக்கு தொழில் உதவித்தொகையாக தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.5 இலட்சம் என மொத்தம் 145 பயனாளிகளுக்கு ரூ.13,60,100/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்லைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக்தாவூத், தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் கௌரவ செயலாளர் முகம்மது சலீம், தென்காசி மாவட்ட கிறிஸ்துவ பெண்கள் உதவும் சங்கம் கௌரவ செயலாளர் சந்திரா, ஆல்பா குரூப் ஆப் கம்பெனி சவுதி அரேபியா இப்ராஹிம், முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் கௌரவ இணைச் செயலாளர்கள் மரு.அப்துல் அஜீஸ், பக்கீர் மைதீன், மாமன்ற உறுப்பினர் நாகூர் மீரான் , தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் காப்புரிமை உறுப்பினர் அமீர்கான் மற்றும் கௌரவ உறுப்பினர்கள், காப்புரிமை உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.