ஊட்டி. டிச.21.
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாக தேயிலை தோட்டங்களில் நடமாடும் காட்டு யானைகளால் தொழிலாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் பந்தலூர் வட்டத்திற்கு உட்பட்ட சேரம்பாடி, பிதர்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை தாக்கி சேதப்படுத்துவதோடு வீட்டில் உள்ள பொருட்களையும் சூறையாடி வருகிறது . யானை தாக்குதலில் இருந்து தப்பித்து உயிருக்கு போராடி வீட்டை விட்டு வெளியேறும் பலர் காயம் ஏற்பட்டு வீடுகளை காலி செய்து விட்டு இடம்பெயர வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
வனத்துறையால் புல்லட் என்று அழைக்கப்படும் ஒற்றை யானை சேரங்கோடு, படச்சேரி பகுதியில் மட்டும் 15க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்துள்ளது. மேலும் தமிழ்நாடு தேயிலை தோட்ட குடியிருப்பு சேரங்கோடு பகுதியில் சுலோச்சனா, விசாலாட்சி ஆகியோரின் வீடுகளை உடைத்து வீட்டில் உள்ள உணவுப் பொருட்களையும் சூறையாடி சென்றுள்ளது. அங்கு குடியிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு பின்பக்கம் வழியாக தப்பிச் சென்றனர். மேலும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள யானைகளால் பணிக்கு செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து புல்லட் யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்ட பொதுமக்களின் உயிரை காக்க வேண்டும் என அப் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த போராட்டத்தில் கூடலூர் எம்எல்ஏ. பொன் ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வனத்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் கூடலூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி செயலாளர் கேதீசுவரன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வனத்துறையை கண்டித்தும் தமிழக அரசு மக்களுக்கு பாதுகாப்பளிக்குமாறும் கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.