திருவெண்ணெய்நல்லூர், ஜன. 13 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 85 குடும்பங்களுக்கு சொந்தமான ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில் டி.எடையார் கிராமத்திற்கு செல்லும் வழியில் ஏரிக்கரை ஓரத்தில் உள்ளது. இந்த கோயில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயில் பூசாரியாக அங்கமுத்து மகன் வேடியப்பன் (70), என்பவர் இருந்து பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8-ந் தேதி கோயிலில் பூஜை செய்துவிட்டு அன்று மாலை கோயில் கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் 9-ந் தேதி மாலை கோயிலில் பூஜை செய்வதற்காக வந்து பார்த்தபோது கோயில் கோபுரத்தில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கலசம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் கோயில் பூசாரி வேடியப்பன் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன் திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார். கோயில் கலசம் திருடிய சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



