நாகர்கோவில் மார்ச் 12
கன்னியாகுமரியில் ஒரு பசுமை விமானநிலையம் அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசிய கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல புகழ் வாய்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளது. பிற நாடுகள் மற்றும் பிற மாநிலத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் லட்சகணக்கில் குமரியில் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர். இந்தியாவின் தென் கோடியில் உள்ள குமரி மாவட்டத்திற்கு வந்து செல்வதற்கு போக்குவரத்து ஒரு சவாலாக உள்ளது. உலகமெங்கும் உள்ள சுற்றுலா பயணிகள் எளிதில் குமரிக்கு வருகை தர இந்த விமான நிலையம் மிக அவசியம்.
கன்னியாகுமரியை உலக தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக்க இங்கு ஒரு விமான நிலையம் மிக அவசியம். இங்கு ஒரு விமான நிலையம் அமையும் பட்சத்தில், இது இந்திய, தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.
எமது மாவட்டத்தின் வேலை வாய்ப்பை பெருக்கவும், இந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் விமான நிலையம் துணை நிற்கும்.மேலும் இந்த பகுதிக்கு ஏராளமான முதலீட்டை கொண்டு வருவதுடன் கன்னியாகுமரியை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற செய்ய ஒரு விமான நிலையம் தேவை.
கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் தேவை என்ற மக்களின் நீண்ட நாள் கனவை நிஜமாக்கிட இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசுக்கு கோரிக்கை வைப்பதாக பேசினார்.