மயிலாடுதுறை அக். 14
தருமபுரம் அரசு உதவிபெறும் மழலையர் பள்ளி மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் மழலையர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு புதிதாக சேர்ந்த 27 மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் பள்ளி நிர்வாகத்தினர் மங்கள வாத்தியங்கள் முழங்க யானை, குதிரை, ஆடு ஆகிய மங்கள சின்னங்கள் முன்னே செல்ல ஊர்வலமாக தருமபுரம் ஆதீன மடத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆதின பூஜை படத்தில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மாணவர்களுக்கு நாக்கில் மயிலிறகால் தேன் தடவி நெல்லில் அகரம் எழுத வைத்து அத்தியாபியாசம் என்கிற ஆரம்பக் கல்வியை தொடக்கி வைத்தார். இதில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வித்தியாரம்பம் நிகழ்ச்சியில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு குழந்தைகளை பெற்றோருடன் அமர வைத்து மாலை அணிவித்து நெற்றியில் குங்குமம் இட்டு ஆசிரியர்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து ஆரம்பக் கல்வியான அகரம் எழுத வைத்து கல்வியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைவர் மோகன்ராஜ், பள்ளி தாளாளர் வெற்றிவேந்தன், துணைத் தலைவர் சட்டநாதன், செயலாளர் ராமதுரை, பொருளாளர் செந்தில், இயக்குனர்கள் வீராசாமி, சந்திரசேகர், சிவலிங்கம், பாலாஜி, விக்னேஸ்வரன், மீனா மோகன்ராஜ்,மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான குழந்தைகள் விஜயதசமியை முன்னிட்டு அகரம் எழுதி கல்வி கற்பித்தலை தொடங்கினர்.