தருமபுரி மே. 14
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டு வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சி தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் லோகநாதன் வரவேற்றார். விழாவில் வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் உருவ சிலைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் அதியமான் மற்றும் அவ்வையார் திரு உருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதைத் தொடர்ந்து வள்ளல் அதியமான் கோட்டத்தில் உள்ள வள்ளல் அதியமானின் வரலாற்று புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் வள்ளல் அதியமானின் வாழ்க்கை வரலாறு குறும்படத்தினையும் ஆட்சியர் வெளியிட்டார். பின்னர் ஆட்சியர் பேசுகையில் தமிழ் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபங்களில் அவர்களின் பிறந்த நாளில் அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாக கொண்டாட அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த வகையில் வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளல் அதியமான் கோட்டம் ஒரு கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, உதவி ஆட்சியர் காயத்ரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, ஆவின் பொது மேலாளர் மாலதி மற்றும் அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.