கருங்கல் நவ 17
தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் கருங்கல் அலக்சாண்டர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது :-
வருகின்ற நவம்பர் 21
உலக மீனவர் தினம் இதனை உலகெங்கும் உள்ள மீனவ தொழிலாளர்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.
ஆனால் வளைகுடா நாடான பகரின் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற குமரி மாவட்டம் கடியபட்டணம் மீனவ கிராமத்தை சார்ந்த சகாய செல்சோ மற்றும் அவரது நண்பர் ஆன்டனி ஜார்ஜ் வின்சென்ட் ஆகியோருக்கும இவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக சோகமான விழாவாகவே உள்ளது.
பகரின் நாட்டில் மீன்பிடிக்க சென்ற இவ்விருவரும் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை ஊர் திரும்பவில்லை. மட்டுமல்லாமல் இவர்கள் எங்கு இருக்கின்றனர் என்ற தகவல்கூட இருவரின் குடும்பத்தினருக்கும் இல்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கிப்போய் உள்ளனர். மட்டுமல்லாமல் இருவரது குடும்பத்தினரும் சொல்லமுடியாத வறுமையில் வாடி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகள் ஆகியும் இவர்களை கண்டுபிடிக்க மத்திய மாநில அரசு நிர்வாகங்கள் எவ்வித முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனுக்கள் அளித்து இருவரையும் மீட்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் பயனற்ற நிலையிலேயே உள்ளது.
எனவே இந்த மீனவர் தினத்திலாவது
வளைகுடா நாடான பகரின் நாட்டில் கடலில் காணாமல் போய் 2 ஆண்டுகள் கடந்தும் கண்டு பிடிக்கப்படாத கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சார்ந்த மீன்பிடி தொழிலாளிகள் சகாய செல்சோ, ஆன்டனி ஜார்ஜ் வின்சென்ட் ஆகியோரை கண்டுபிடித்து தர கேட்டும், அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி
தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் வருகின்ற 21 – 11- 2024 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு நாகர்கோவிலில்
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன், நடைபெற உள்ளது.
இப்போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மனித நேய, சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.