அரியலூர், அக்;21
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் மூலம் BS VI – 02 புதிய புறநகர்ப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாணாக்கர்கள் உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்றையதினம், BS VI 02 புதிய புறநகரப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அதன்படி இப்புதிய புறநகரப் பேருந்து எண்.TN45/N-4491 காலை 9.30 மணிக்கு செந்துறையில் இருந்து புறப்பட்டு நாகல்குழி, ஜெயங்கொண்டம், விருத்தாசலம் வழியாக சென்னை மாதவரத்தினை சென்றடையும், இரவு 10.00 மணிக்கு சென்னை மாதவரத்திலிருந்து புறப்பட்டு விருத்தாசலம், ஜெயங்கொண்டம், நாகல்குழி வழியாக செந்துறையை வந்தடையும். புறநகரப் பேருந்து எண்.TN45/N-4492 காலை 9.30 மணிக்கு ஜெயங்கொண்டத்திலிருந்து புறப்பட்டு விருத்தாசலம் வழியாக சென்னை கிளாம்பாக்கத்தை சென்றடையும், இரவு 09.30 மணிக்கு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து புறப்பட்டு விருத்தாசலம், ஜெயங்கொண்டம், இரும்புலிக்குறிச்சி வழியாக செந்துறையை வந்தடையும் வகையில் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அமைச்சர்
செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது;
ரேபிடோ பைக்கை வாடகைக்கு பயன்படுத்தும் நிலை தமிழ்நாட்டிலும் உள்ளது. அதனால் ஏற்படுகின்ற பாதுகாப்பற்ற சூழல் குறித்து சமூக ஆர்வலர்கள்புகார் தெரிவிக்கிறார்கள். அதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கின்ற கல்லூரி இளைஞர்கள் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அது தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே இதனை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழ் தாய் வாழ்த்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தமிழ்நாட்டின் பண்பாடு தெரிந்தவர்களுக்கு, அதனுடைய அருமை தெரிந்தவர்களுக்கு இதனுடைய அருமை புரியும். ஆனால் சீமானை போன்றவர்கள் போலி அரசியல்வாதிகள் அவர்களைப் போன்றவர்களை மக்கள் புறந்தள்ளுவார்கள் என பதில் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி, பொது மேலாளர் ஆ.முத்துக்கிருஷ்ணன், துணை மேலாளர் வணிகம் சாமிநாதன், கோட்ட மேலாளர் இராமநாதன், ஜெயங்கொண்டம் கிளை மேலாளர் ராம்குமார் மற்றும் செந்துறை திமுக தெற்கு – வடக்கு ஒன்றியச்செயலாளர்கள் செல்வராஜ் ,எழில்மாறன் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்