ஊட்டி.ஜன. 10.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தற்போது HMPV வைரஸ் பரவி வருவதால் நீலகிரி மாவட்ட எல்லையான கர்நாடக மற்றும் கேரளா மாநிலம் எல்லைபகுதிகளில் சுகாதார துறை சார்பில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இரண்டு பேருக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலம் எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டம் என்பதால் கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நோய் பரவுதலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கேரளா மற்றும் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகளை நீலகிரி மாவட்ட எல்லையான கக்கநல்லா,தாளூர் உட்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் சுகாதார பணியாளர்களை கொண்டு குழு அமைத்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதனிடையே வருகின்ற பொங்கல் தொடர் விடுமுறைக்கு தமிழகம் மட்டுமல்லாமல்,கேரளா,கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.
இதற்காக மாவட்டம் நிர்வாகம் சார்பில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படுவதாக தெரிவித்தார். சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் , பள்ளி கல்லூரி மாணவர்களும் , மருத்துவ மனை நோயாளிகளும் பாதுகாப்பின் அவசியம் கருதி கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.