கன்னியாகுமரி ஜூன் 1
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் காலையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி சுற்றிப் பார்க்க இருப்பதால் திடீரென நேற்று மதியம் 11.40 மணிக்கு விவேகானந்தர் பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டதால், அந்த நேரத்தில், திரிவேணி சங்கமம் அமைந்துள்ள கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர், சூரிய உதயத்தைப் பார்ப்பதற்கு மட்டும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நேற்று காலை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், செல்போன் மூலம் படம் எடுக்க சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தியானம் செய்யும் தியான மண்டபத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஸ்ரீபாத மண்டபம் வரை பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென்று நேற்று காலை 11.30 மணிக்கு மேல் விவேகானந்தர் பாறையில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை அங்கிருந்து அதிகாரிகள் வெளியேற்றினார்கள்.
பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிப் பார்க்க உள்ளதால் பொதுமக்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியது. விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா படகு சேவையும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
இதனால் பல மாநிலங்களில் இருந்தும் விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காக ஏற்கெனவே முன்கூட்டியே திட்டமிட்டு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.