நாகர்கோவில் மே 28
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றதை நிறுத்தியதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருசானி, சித்தாறு 1, சித்தாறு 2 ஆகிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. கனமழை காரணமாகவும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து கடந்த 19ம் தேதி முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.தொடர்ந்து மழையின் அளவு அதிகரித்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் பேரூராட்சி நிர்வாகம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தது. இதை தொடர்ந்து எட்டு நாட்களாக நீடித்து வந்த தடையானது பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டதாலும், மழையின் அளவும் குறைந்தாலும், திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று காலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பகுதியிலிருந்தும் கோடை விடுமுறையை ஒட்டி வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் கடந்த 8 நாட்களாக கவலையோடு திரும்பி சென்றனர். இந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.