திருவாரூர், நவம்பர் 18 –
திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மட்டுமின்றி தனியார் உரகடைகள் விவசாயத்திற்கு தேவையான உரங்களை விற்பனை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பயிர்கள் செழிப்பாகவும், அதிக மகசூல் கிடைக்கும் என்பதற்காகவும் விவசாயிகள் செயற்கை உரங்களை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பயிர்களுக்கு பாதுகாப்பளிக்கும் உரங்களே, பயிருக்கு எதிரியாக மாறுவது வேதனையளிக்கிறது.
இந்நிலையில் பிரபல கம்பனிகளின் பெயர்களில் போலி உரம் சமீப காலமாக விற்பனைக்கு வருவதாக தெரிய வருகிறது. இதனையொட்டி வேளாண் துறையினர் உரக்கடைகளில் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று கோட்டூர் அருகே கோமளபேட்டை என்ற இடத்தில் இயங்கி வரும் தனியார் உரக்கடை ஒன்றினை
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலசரஸ்வதி, துணை இயக்குனர் விஜயலட்சுமி, உர கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில் மற்றும் உதவி இயக்குனர் தங்க பாண்டியன் ஆகியோர் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தபோது சம்பந்தப்பட்ட அந்த கடையில் பிரபல கம்பெனி ஒன்றின் பெயரில் போலியாக 169 மூட்டை டிஏபி உரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் 8,450 கிலோ எடை கொண்ட அந்த உர மூட்டைகளை பறிமுதல் செய்துள்ள வேளாண்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடையின் குடோனுக்கு சீல் வைத்ததுடன் உரம் மாதிரிகளை ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து இணை இயக்குனர் பால சரஸ்வதி கூறுகையில், இதேபோன்று ஆய்வு பணியானது மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
போலி உரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கடைகளில் வாங்கி பயன்படுத்தும் உரங்களில், எந்த உரம் உண்மையானது என தெரியாமல் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.



