திருவாரூர், நவம்பர் 10 –
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு எல்லைநாகலடி கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஜெகதீஸ் பாபு (36). கடந்த ஆறாம் தேதி இரு சக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது
எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெகதீஸ்பாபு நேற்றிரவு மூளைச்சாவு அடைந்தார்.
திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சுமதி மற்றும் மருத்துவக்குழுவினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் குடும்பத்தினர் முன்வந்தனர். உறுப்பு தானம் செய்யப்பட்ட உடலுக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உத்தரவின்படி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மன்னார்குடி கோட்டாட்சியர் யோகேஸ்வரன், மருத்துவக்கல்லூரி பொறுப்பு முதல்வர் சுமதி, மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய அலுவலர் ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் பரமேஸ்வரி, கட்டிமேடு கிராம நிர்வாக அலுவலர் குணசெல்வி, வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், ஆதிரெங்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகர், கட்டிமேடு மதியழகன், ஜெயபால், உறவினர்கள் மற்றும் ஜெகதீஸ் பாபுவின் நண்பர்கள் கலந்து கொண்டனர். உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்த ஜெகதீஸ்பாபு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மருத்துவக்குழுவினர் வெகுவாக பாராட்டினர்.



