நாகர்கோவில் டிச 24
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் அய்யன் திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்டு 25-வது ஆண்டு நிறைவடைவதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறவுள்ள வெள்ளி விழா நிகழ்ச்சியினை வெற்றிகரமாக நடத்துவது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் தெரிவிக்கையில்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அயராத முயற்சியால் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலையின் 25-வது வெள்ளிவிழா ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக உலகத்தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் வருகின்ற டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1-2025 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ள வெள்ளி விழா கொண்டாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள். தமிழ்ச்சங்கங்கள். தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ளவும். அந்தந்த உள்ளாட்சி பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு விழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு அனைத்து பகுதிகளிலும் விளம்பரங்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளும் அந்தந்த பகுதிகளிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் இணைந்து அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா முன்னோற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தாங்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு, உற்றார் உறவினர்கள் தங்கள் அயலகத்தாரிடமும் அய்யன் திருவள்ளுவரின் சிறப்புகளை எடுத்து கூறி, நிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் மெர்லியன்ட் தாஸ், உதவி இயக்குநர்கள் துவாரகா நாத் (பேரூராட்சிகள்) சாந்தி (ஊராட்சிகள்). கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (போதை ஒழிப்பு) மோகன்தாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல் முருகன், பேரூராட்சி தலைவர்கள். மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள். உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.