தேரூர், டிசம்பர் 6 –
தேரூர் அருகே குறண்டி பகுதியில் உள்ள ஈஷா வித்யா மெட்ரிக் பள்ளியில் தேசிய மாணவர் படை சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவை பள்ளி முதல்வர் திருமதி கலாவதி, துணை முதல்வர் திரு. தேன்ராஜ் தலைமை ஏற்று தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக என்.டீ.ஆர் பவுண்டேஷனின் தலைவர் டாக்டர் ஜெ. அர்னால்டு அரசு அவர்கள் கலந்து கொண்டார்.
விழாவின் தொடக்கத்தில் மாணவ, மாணவியர்கள் தேசிய மாணவர் படையின் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர் பேசிய சிறப்பு விருந்தினர் திரு. அர்னால்டு அரசு அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய மாணவர் படை குறித்தும், தேசப்பற்று குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சீருடை மற்றும் பேட்ஜ் ஆகியவற்றை வழங்கினார். தேசிய மாணவர் படை முகாமில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார். இவ்விழாவில் மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் தேசிய மாணவர் படை அதிகாரி திரு.எஸ்.கமல் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.



