மார்த்தாண்டம் ஜூன் 2-
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய இரு சிறுவர்களை நபர் ஒருவர் துணிச்சலாக உயிருடன் மீட்டார். ஆனால் தனது உயிரை தியாகம் செய்தார். உடலை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்
குழித்துறை தபால் நிலையம் சந்திப்பைச் சேர்ந்த பீட்டர் (58) இவர் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார். தினசரி காலை தாமிரபரணி ஆற்றில் குழித்துறை சப்பாத் கடவில் குளிக்க செல்வது வழக்கம். நீச்சலும் நல்லபடியாக தெரிந்தவர். சிறு வயது முதலே தனது தந்தையுடன் குளிப்பதால் இந்த ஆற்று கடவு இவருக்கு மிகவும் பழக்கப்பட்டதாகும்.
சமீபத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சப்பாத் பாலம் மேல் பகுதி வழியாக சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்கிறது. சுமார் 10 நாளுக்கு மேலாக மழை பெய்வதால் இந்த சப்பாத் மேல் பகுதி பாசி படர்ந்து கடுமையாக வழுக்கும் நிலையில் காணப்படுகிறது. இதனால் நடக்கவும், பைக்குகள் செல்ல போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நேற்று சப்பாத் மேல் பகுதியில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் அதிகமாகவே பாய்ந்தது. பாசி படர்ந்து வழுக்கும் அதிகமாக உள்ளது.
பள்ளி நாளை திறக்கும் நிலையில் கோடை விடுமுறையை பயன்படுத்தும் விதத்தில் மார்த்தாண்டத்தை சேர்ந்த 13 மற்றும் 15 வயது மதிக்கத்தக்க இரு பள்ளி மாணவர்கள் வி எல் சி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சப்பாத்தை கடந்து நடந்து வந்துள்ளனர்.
நடுப்பகுதி வரும்போது கடுமையான வழுக்கில் சிக்கி இவர்கள் விழுந்தனர். தண்ணீர் இழுத்து சப்பாத் கீழ்ப்பகுதி கொண்டு சென்றது.
இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அப்பொழுது துணி துவைத்து கொண்டிருந்த குழித்துறை தபால் நிலைய சந்திப்பு பகுதியை சேர்ந்த பீட்டர் உதவிக்கு ஆற்றுக்குள் துணிச்சலாக குதித்துள்ளார்.
தண்ணீரில் சிக்கிய இரு சிறுவர்களையும் அவர் மேலே செல்ல நீந்திய படியே முழுமையாக உதவி செய்துள்ளார். இவரது முழுமையான முயற்சியால் தான் இரு சிறுவர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர் என இவருடன் குளித்துக் கொண்டிருந்த இருவர் தெரிவித்தனர்.
இரு சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய பீட்டரால் தப்ப முடியவில்லை. தண்ணீரில் மூழ்கி மாயமானார். இவருக்கு மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பெண் குழந்தைக்கு சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனே குழித்துறை தீயணைப்பு படை அதிகாரி சந்திரன் தலைமையில் ஊழியர்கள் வந்து ஆற்றில் தேடினர். உடல் கிடைக்கவில்லை. அதன் பிறகு படகில் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாக்ஸ்
துணிச்சலை பாராட்டி
முதல்வர் நிவாரண நிதி கிடைக்குமா?
இரு சிறுவர்களை உயிரை காப்பாற்றி தனது உயிரை தியாகம் செய்த துணிச்சலான பீட்டர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் விதத்தில் முதல்வர் நிவாரண நிதியில் நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு முழுமையான முயற்சி எடுப்பதாகவும் தாரகை கட்பட் எம் எல் ஏ தெரிவித்தார்.
இணைப்பு – ஆற்றில் மாயமான பீட்டர்