நாகர்கோவில் ஜூலை 25
கேரளாவில் நிபா வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வைரஸ் தமிழகத்திலும் பரவாமல் இருக்க மாநில எல்லைகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி – கேரள தமிழக எல்லையான களியக்காவிளை பகுதியில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தாா். அதையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
கேரளத்திலிருந்து அரசுப் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகளில் வருவோருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனா். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பரிந்துரைக்கப்படுகின்றனா். கன்னியாகுமரி மாவட்ட சுகாதார அலுவலா் மீனாட்சி அறிவுறுத்தலின்படி, களியக்காவிளையில் வட்டார மருத்துவ அலுவலா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.