நாகர்கோவில் அக் 18
குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், திற்பரப்பு அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம், அபாய அளவான 43 அடியை எட்டியது. இதனால், முதற்கட்டமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 250 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கோதையாறு, தாமிரபரணி மற்றும் பரளி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, திற்பரப்பு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, திற்பரப்பு அருவியில் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடையானது மூன்றாவது நாளாக நேற்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குளித்தலை தரைப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தாமிரபரணி மற்றும் பரளி ஆற்றிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.