புதுக்கடை, மார்- 22
தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் 17ஆம் தேதி வரை கள்ளக் கடல் ஏற்பட்டதால் பிரதான அலை தடுப்புச்சுவர் சேதமடைந்தது. சேதமடைந்த 75 மீட்டர் நீளமுள்ள பிரதான அலை தடுப்புச் சுவர் சீரமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் பணிகளின் முன்னேற்பாடு குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும் பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைத்து துறைமுக பாதுகாப்பையும், மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், உடனடியாக சீரமைப்பு பணிகளுக்கு விரைந்து ஒப்புதல் பெற்று பணிகளை மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.