ஆரல்வாய்மொழி மார்ச் 10
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, சக்தி மகளிர் அறக்கட்டளையின் சார்பில் பொதுமக்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இணைந்து நடத்திய உலக மகளிர் தின விழா தோவாளை அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருமண மண்டபத்தில் சக்தி மகளிர் அறக்கட்டளை தலைவர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-
ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தின விழாவை கொண்டாடி வருகிறோம். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், நல்வாழ்வுக்காகவும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். குறிப்பாக தாலிக்குத் தங்கம், இருசக்கர வாகனம், பெண்களின் பணிச்சுமைகளை குறைக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தொட்டில் குழந்தைத் திட்டம் போன்ற திட்டங்களை இந்நாளில் நினைவூட்ட கடமைப்பட்டு இருக்கிறேன். தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க அரசு மகளிருக்கு பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது. மகளிருக்கு இலவச பேரூந்து, மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறோம் எனக் கூறிவிட்டு, விண்ணைத் தொடும் விலைவாசியாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை எல்லாம் மக்கள் தலையில் சுமைகளை ஏற்றி அவர்களுக்கு மீளா துயரை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களையும், குறிப்பாக பெண்களையும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் தி.மு.க பெண்கள் நலனில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை.
இதற்கெல்லாம், வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-விற்கு சம்மட்டி அடி கொடுக்க பெண்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். பெண்களுக்கு செய்த துரோகத்தின் விளைவை வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தி.மு.க-வினர் தெரிந்து கொள்வார்கள். இத்தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அ.இ.அ.தி.மு.க அமோக வெற்றி பெரும் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் பேசினார்.
இவ்விழாவில் டாக்டர் பூர்ணிமா, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் அனிலாசுகுமாறன், பீமநகரி ஊராட்சி முன்னாள் தலைவர் சஜிதா சுப்பிரமணியம், தேரூர் பேரூராட்சித் தலைவர் அமுதராணி, ஆரல்வாய்மொழி பேரூராட்சி துணைத் தலைவர் சுதா பாலகிருஷ்ணன், காட்டுப்புதூர் ஊராட்சி முன்னாள் தலைவர் கிறிஸ்டிபாய், கடுக்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் கமலா மகராஜன், திடல் ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜலெட்சுமி, அருமநல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவர் மகேஸ்வரி, பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர் உஷாபகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாறன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.