தென்காசி, நவ. 20 –
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி குடிநீர் தேவைக்காக குடிநீர் தொட்டி கட்டிட ரூ.25 லட்சம் மதிப்பிலான தனது இடத்தினை தானமாக தென்காசி நகராட்சி தலைவர் சாதிரின் தாயார் நகராட்சிக்கு எழுதி கொடுத்தார்.
தென்காசி நகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், ரூ. 69.45 கோடியில் தாமிரபரணி குடிநீர் திட்டம் -அலகு 2 திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக 5 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்படவுள்ளது. இதில் 3 தொட்டிகள் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படவுள்ளது. மேலும் 2 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் தென்காசி நகராட்சி முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், ஓய்வு பெற்ற ஆசிரியரும், தற்போதைய நகர்மன்ற தலைவர் சாதிரின் தாயாருமான ஆ. ரபீக்காள் தனக்கு சொந்தமான இடத்தினை நகராட்சிக்கு எழுதி கொடுத்துள்ளார்.
தென்காசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் சாதிர் முன்னிலையில் கடையம் சரகம் பொட்டல்புதூர் கிராமத்திலுள்ள தனக்கு பாத்தியப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான 6 செண்ட நிலத்தினை தென்காசி நகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக தானமாக நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனிடம் எழுதி கொடுத்து பத்திரத்தை ஒப்படைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரியா, சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில், நகர் மன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், செய்யது சுலைமான் (எ) ரபீக், நகர திமுக நிர்வாகிகள் அவைத்தலைவர் பாலகிருஷ்ணன் (எ) கிட்டு, துணை செயலாளர்கள் ராம்துரை, பால்ராஜ், பொருளாளர் சேக்பரீத், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கப்பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்ரஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



